மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தட்டுப்பாடு!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏறாவூர் சாரணர் நலன்புரிச் சங்கம் மற்றும் 3ஏ சனசமூக நிலையம் ஆகிய அமைப்புக்கள் இரத்த தானம் வழங்கும் வேலைத்திட்டமொன்றினை இன்று (11.10.2025 ) முன்னெடுத்தது.

அமைப்பின் தலைவர் எம்எஸ்எம். றூமி தலைமையில் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச்செயலாளர் எம்எச்எம். ஹமீம் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்எஸ்எம். நழீம் மற்றும் மத்தியஸ்த சபையின் பயிற்றுநர் எம்ஐஎம். ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சாரண அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இரத்த தான நிகழ்விற்கான ஒத்துழைப்பினை வழங்கினர்.

இந்த முகாமில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.

குறிப்பாக முஸ்லிம் பெண்களும் இங்கு இரத்த தானம் செய்தமை விசேட அம்சமாகும்.