ஹஸ்பர் ஏ.எச்_
இவ்வருடம் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப்புவெளி பொதுநூலகம் தேசியநூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் கணணி தன்னியமாக்கல் செய்யப்பட்டு திறப்பு விழாவும், வாசிப்புமாத ஆரம்ப வைபவமும் 01.10.2025 காலை 9.15 மணி்க்கு நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு தலைமை தாங்கிய உப தலைவர் கை.வைரவநாதன் அவர்கள் . கருத்து தெரிவிக்கும்போது சபையால் பல திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சமூக நலன் கருதி அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் உயரிய இலக்கினை அடைய வேண்டுமாயின் அங்கு கல்வி முதன்மையானதாக இருக்க வேண்டும். இதற்காக நாம் உப்புவெளி, சாம்பல்தீவு, வெள்ளைமணல், சீனக்குடா ஆகிய பொது நூலகங்களின் வாசகர்களது கல்வி சேவை நலன் கருதி வருடாந்தம் அதிகளவு நிதியினை சபையில் ஒதுக்கீடு செய்து வழங்குகின்றோம். அதேபோன்று லிங்கநகர், வெள்ளைமணல் முன்பள்ளிகள் மூலமாகவும் இலவச சேவை வழங்கி வருகின்றோம். வாசிப்பு மாதத்தில் இலவசநூலக அங்கத்துவமும் வழங்கப்படுவதும் சிறப்பம்சமாகும். உப்புவெளி நூலகம் புதிதாக கணணிமயப் படுத்தப்பட்டு மக்கள் பாவனைகாக திறந்து வைக்கப்பட்டுள்ள தருணத்திலிருந்து எமது சபை அதற்கான சகல பராமரிப்பு மற்றும் தேவைகளையும் பூர்த்தி செய்வதனையும் பொறுப்பேற்கும் அத்துடன் எமது உப்புவெளி நூலகத்திற்கு செயற்திட்டத்தை வழங்கிய தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினர். பணிப்பாளர், வருகை தந்துள்ள விருந்தினர்கள், மற்றும் எமது சபை நூலகர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
வரவேற்புரையை நிகழ்த்திய செயலாளர் திரு.S.வீரசுதாகரன் அவர்கள் நாட்டின் எதிர்காலமாகிய மாணவச் செல்வங்கள் மற்றும் வாசசர்கள் அறிவின் ஊற்றாக விளங்கும் நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும். இம்முறை வாசிப்புமாத நிகழ்வு, போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும் எனக் கூறினார்
நிகழ்வுக்கான தொகுப்பு மற்றும் நன்றியுரையை பிரதம நூலகர் க.வரதகுமார் நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.S.முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
பிரதம விருந்தினராக சிறப்பித்த திரு.ந.ஐங்கரன் (உள்ளூராட்சி உதவி ஆணையர், உள்ளூராட்சித் திணைக்களம், கிழக்கு மாகாணம்) அவர்கள் தனது உரையில் நாம் நிகழ்வுகளை ஆரம்பிக்கின்றோம் வளங்களைப் பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதனை முன்னெடுத்துச் செல்வதிலும், அதற்கான வளங்களைப் பாவிப்பதிலும், பராமரிப்பதிலும் சிறந்த இலக்கினையும், பெறுபேறுகளைப் பெறுகின்றோமா? எனும் கேள்வி எழும்போதுதான் நாம் தவறு விடுகின்றோம். எனவே வாசிப்புமாத நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும், தன்னியமாக்கல் சேவை ஆரம்பிக்கப்பட்ட இத்தருணத்தில்
மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியிலிருந்து வாசகர் வருகை அதிகரிக்கப்பட்டு உப்புவெளி இலத்திரனியல் பொதுநூலகத்தை முழுமையாக பயன்படுத்த முன்வர வேண்டும் அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த திருமதி.சென்னை பண்டார (பணிப்பாளர், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, கொழும்பு) அவர்கள் தனது உரையில், எமது சபையின் அனுசரணையுடன் உப்புவெளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட பெறுமதிமிக்க நவீன கணணி. வளங்களுடன் கூடிய இந்த நூலகம் இன்று முதல் உப்புவெளி இலத்திரனியல் நூலகம் என மாற்றமடைகின்றது.
இதனை சிறுவர் தினமான இன்று வாசிப்பு மாதத்தின் ஆரம்ப வைபவத்தின் போது வாசகர்களது பாவனைக்கு திறந்து வைப்பதனையிட்டு பெருமையடைகின்றேன். மேலும் வாசகர் பாவனைக்கு வழங்கப்பட்ட அனைத்து வளங்களும் வாசகர்கள் அதிகரிக்கப்பட்டு பயன்படுத்தப்டல் வேண்டும் அப்பொழுதுதான் எமது எண்ணமும், திட்டமும் முழுமை பெறும். மேலும் மிகவும் சிறந்த முறையில் நூலகர். நூலக உத்தியோகத்தர்கன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதனையிட்டு பெருமைப்படுகிறேன். மேலும் நவீன இலத்திரனியல் சாதனங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப வாசகர்களை அதிகரித்து உள்வாங்குவதற்கு ஏற்றவாறு நீங்கள் தயாராக வேண்டும் என்றார்.
நிகழ்வில் கலாபூஷணம் மற்றும் திருகோணமலை தமிழச்சங்க தலைவர் திருமலை நவம் அவர்கள் திருகோணமலை கலை இலக்கிய வரலாறு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது தான் சிறுவயதிலிருந்து
கற்பதற்கு நூலகங்களே உறுதுணையாக இருந்தது. நான் எழுதிய இராவணதேசம் எனும் வரலாற்று ஆய்வு நூலுக்கான விடயங்கள், பத்திரிகைத் துணுக்குகள், ஆவணங்களை உப்புவெளி நூலகத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன் என்பதனை பெருமையுடன் கூறுகின்றேன் என்றார். இதன்போது திருக்குறள் தெளிவுரை நூலும் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
நிகழ்விற்கு ஆவணவாக்கல் சபையினர், சபை நூலகர், நூலக உத்தியோகத்தர்கள், கெளரவ உறுப்பினர்கள். வாசகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


