மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 1876 திட்டங்களுக்கு அனுமதியளிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) திகதி இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இவ் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர் அரச நிறுவங்களில் காணப்படும் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் கிராமிய வீதிகளை அமைத்தல், குடிநீர் வழங்கள், மலசல கூடங்களை அமைத்தல், கிரான் பாலத்தை முன் உரிமையின் அடிப்படையில் எதிர்வரும் வருடத்தில் நிர்மானித்தல், வீதி அமைத்தல், நன்நீர் மீன் வளர்ப்பை அதிகரித்தல், விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான தளபாடங்களைப் பெற்றுக்கொள்ளுதல், சுகாதார உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், மாவட்டத்தில் இயங்கா நிலையில் காணப்படும பேருந்துகளை இயங்கச்செய்தல், மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந், திருமதி. நவருபரஞ்ஜினி முகுத்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரீ நிர்மலராஜ், எஸ்.முரளீதரன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் கடந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக பொதுமக்களுக்கு சொந்தமான இடங்களில் காணப்படும் பாதுகாப்பு படையினர் முகாமிட்டிருக்கும் முறக்கொட்டான்சேனை முகாமானது இன்று மக்களுக்கு கையளிக்கப்பட்டமை தொடர்பாகவும் இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.