கேபிள் கார் விபத்தில் ஏழு பிக்குகள் பலி!

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (24) இரவு 9.00 மணியளவில், புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மலை உச்சிக்கு பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பன்சியகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.