ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், பொலிஸ் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது வளவாளர்களாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அநுராதபுர மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான மகேந்திர தசநாயக்க, லக்மல் சேனாரத்ன மற்றும் எஸ்.ஜி.உதர சந்தமாலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவது, மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பொலிஸாரின் பங்கு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பாடசாலைகள் மற்றும் சமூக மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய உத்திகள் குறித்தும் இச்செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தளமாக இச்செயலமர்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


