ஹஸ்பர் ஏ.எச்_
“ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று (23) நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் அவர்களின் முதியோர் வாழ்க்கையை வினைத்திறனாக வாழ வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதுமையுடன் ஏற்படும் மாறிவரும் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு விளக்கி, ஓய்வூதியம் தொடர்பான சட்டச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, வெற்றிகரமான முதியோர் வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை முதியோர்களுக்கு வழங்குவதற்காக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் அரச, அரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணிபுரியும் நபர்களுக்கு “ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை” ஓய்வூதியத்திற்கு முந்தைய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் முதுமை வாழ்க்கையை சிறந்த வாழ்க்கையாக மாற்றுகிறது. இது தேசிய அளவில் 02 திட்டங்களாகவும், மாவட்டத்தில் 25 நிகழ்ச்சித் திட்டங்களாகவும் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு காலத்தை அனுபவிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய வழி காட்டல்கள், EPF,ETF பெற்றுக் கொள்ளல், தனிப்பட்ட கோவைகள் பாதுகாப்பு மற்றும் கோப்புக்கள் தயாரித்தல், திட்டமிட்ட முதுமைப்பருவம் எனும் தலைப்புக்களில் விளக்கவுரைகள், வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களால் இதன்போது வழங்கப்பட்டது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய, மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம் இர்பான் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


