எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சை பிரிவினை சுகாதார அமைச்சர் மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
மட்டக்களப்பு போதனா போதனா வைத்தியசாலையில் ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இருதய சிகிச்சை பிரிவின் முதல் கட்ட திறப்பு விழா நிகழ்வானது சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு ஆகியோரது பங்குபற்றுதலுடன் மக்கள் பாவனைக்காக இன்று (18) கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் புதிய இருதயவியல் பிரிவு கட்டிடமானது 05 தளங்களைக் கொண்டுள்ளதுடன் 4,328 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த இருதயவியல் பிரிவு கட்டிடத்தின் தரை தளத்தில், எக்ஸ்-ரே மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள் உள்ளன, முதல் தளத்தில் ஒரு கேத் லேப் மற்றும் ஒரு கரோனரி கேர் யூனிட் (CCU) உள்ளன. இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (SICU) உள்ளன, மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் 80 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன மயப்படுத்த்தப்பட்ட இருதய சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதுடன் மூன்று மாத காலத்தில் புதிய MRI பிரிவினை அமைத்து தருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வைத்திய சாலைக்கு தேவையாகவுள்ள புதிய கட்டிட் தொகுதியை அமைத்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதுடன் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கு தேவையான நீதியினை பாதீட்டில் சமர்ப்பித்து நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இதன் போது கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கலாரஞ்சனி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


