மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்கள் தனது 53 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான வைத்தியர் நிமலரஞ்சன் யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த ஒருவராகும். அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்ட வைத்தியர் நிமலரஞ்சன் மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்ந்தார். இவரது இழப்பு அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
தனது வைத்தியத் திறமையினால் பல நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.


