எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மற்றும் மாவட்டத்திற்கான சுற்றுலா தகவல் மையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களினால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சமூக மட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டன.
மேலும் சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதகதியில் மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி) , பிரதம பொறியியலாளர் ரீ. சுமன், பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரி.நிர்மலன், வி.நவநீதன், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மதனா தயாகரன் மற்றும் சுற்றுலா துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


