காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி, உயர்கல்வி தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தலும் அதன் இயங்கு நிலையை பரிசோதித்தலும் என்னும் தலைப்பிலான போட்டி நிகழ்ச்சியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 65 பாடசாலைகளில் இந்த சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுவினை நடைமுறைப்படுத்தல் அதன் இயங்கு நிலைகள், அதனால் சமூகத்துக்கு ஆற்றப்படும் பங்களிப்புகள்
தொடர்பான 13 சுட்டிகளை உள்ளடக்கிய வகையில் நேரடியான அவதானிப்பு மற்றும் பரிசீலனைகள் இடம்பெற்று புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் ஒரு பாடசாலை பெற வேண்டிய உயர்ந்த புள்ளியான 10 புள்ளிகளில் காத்தான்குடி மத்திய கல்லூரியானது 9.9 என்ற புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 பாடசாலைகளில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக பாடசாலைகளைத் தரிசித்து,
சிறுவர் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானிப்பு மற்றும் பரிசீலனைகளை செய்து இந்த புள்ளிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட் அவர்களின்

ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியராக கடமை ஆற்றும் திருமதி V. தவச்சந்திரராஜா அவர்கள் மேற்படி சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விடையங்களை சிறப்பான முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி பாடசாலை முதலாம் இடம் பெறுவதற்கு பெரிய பங்களிப்பினை செய்திருந்ததை குறிப்பிடத்தக்கது அந்த வகையில் உரிய பொறுப்பாசிரியருக்கும் சிறுவர் பாதுகாப்பு குழுவிலுள்ள மாணவர்கள் மற்றும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் பாடசாலை சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.