(சுமன்)
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்கா எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கும் முகமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், கோ.கருணாகரம் ஜனா, பா.அரியநேத்திரன், சந்திரகுமார் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்கள் உணர்வுடன் வருகை தந்து தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






