இலங்கையர் தினம் “தேசிய நிகழ்விற்கு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவின் அடிப்படையில், இலங்கையில் நல்லிணக்கம். ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் தேசிய அடையாளத்தை முழுமையாக்குவதற்கும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையாக அந்த அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும்” இலங்கையர் தினம் “தேசிய நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பங்குபற்றியவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு குழுவினரும் தேசிய ஒற்றுமை, கலாசார மதிப்புகள், கலை நிகழ்ச்சிகள், மக்களின் பங்குபற்றல் போன்ற அம்சங்களை மையப்படுத்தி தங்களது யோசனைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் கலாசார அமைச்சின் அதிகாரிகள், பல்துறைசார்ந்த ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


