எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வளமான, பொருளாதார பலம் மிக்க நாட்டை கட்டியெழுப்பும் தொனிப்பொருளிற்கு அமைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடாளாவிய ரீதியில் இடம் பெற்றுவரும் தெளிவூட்டல் செயற்பாட்டிற்கு அமைய தென்னை பயிற்செய்கை சபையின் மட்டக்களப்பு தென்னை அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் செய்முறைப் பயிற்சி ஊடாக குறித்த தெளிவுபடுத்தல் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற
செயலமர்விற்கு வளவாளராக மட்டக்களப்பு தென்னை பயிற்செய்கை சபையின் பிரதி முகாமையாளர் (விரிவாக்கல்) ரவிச்சந்திரன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.
நாட்டில் தென்னை உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பவை தொடர்பாக இதன் போது தெளிவு படுத்தப்பட்டதுடன், 25 தென்னை மரக்கன்றுகள் மாவட்ட செயலக வளாகத்தில் நடப்பட்டதுடன், செய்முறைப் பயிற்சிகளும் இதன் போது உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த செயலமர்வில் விவசாய திணைக்களம், புள்ளிவிபர திணைக்களம் மற்று இடம் முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


