கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த சவாலை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பொருட்டு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளுடனும் குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் கூட்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இத்தருணத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேட வேண்டும் என்று குறிப்பிட்டார். முதலாவது ரணில் விக்கிரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டமாகும் என்றும், இரண்டாவதாக, நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் நிமித்தம், சகல அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு சுட்டிக்காட்டினார்.
இதற்காக வேண்டி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு நடவடிக்கை போலவே அரசாங்கத்தின் சகல ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்ந்தும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இதன் எதிர்காலப் பணிகளுக்காக கட்சிச் செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு செயல்பாட்டுக் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று கூடிய சகல கட்சித் தலைவர்களும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


