விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் மகாவலி அதிகாரசபை, “தரமான மீன் உற்பத்திக்கான வணிக மீன்பிடி சமூகம்” என்ற தொனிப்பொருளில் “சாஸ்தாய சவிய” என்ற சிறப்பு நிகழ்ச்சியானது நேற்று மாலை (14) கந்தளாய், சூரியபுரவில் உள்ள சூரிய வெவவில் (குளம்) நடைபெற்றது .
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன மீன்பிடி சங்கம் மற்றும் சூரிய குள மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு 13 புதிய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன.
மேலும், இப்பகுதியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, திலாப்பியா இனத்தைச் சேர்ந்த ‘அசெட்டோ’ எனப்படும் இரண்டு லட்சம் சிறிய மீன் குஞ்சுகள் சூரிய குளத்தில் விடப்பட்டன.
மீனவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன் குஞ்சுகளின் மொத்த மதிப்பு ரூ. 22.13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 960 மீனவ குடும்பங்கள் பயனடைவார்கள்.
சூரியபுர மீனவர்களின் அன்றாட வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம், ஒரு நாளைக்கு ரூ. 10,000 க்கும் அதிகமான மதிப்புள்ள மீன் அறுவடையைப் பெறுவதும், அதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 5000 வரை வருமானமும் பெறமுடியும் .
இந்நிகழ்வில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த ஜெஹான், சூரியபுர மகாவலி அதிகாரசபையின் பிரதேச மேலாளர் நலித்த சஞ்சீவ பாலசூரிய மற்றும் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் டி.எம். தாரக்க சந்தருவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


