பாறுக் ஷிஹான்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (SEUSL) கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறையின் ஏற்பாட்டில், “இப்னு கல்தூன் மற்றும் சமூகவியலின் தோற்றமும்” எனும் தலைப்பில் சிறப்பு அறிவியல் சொற்பொழிவு திங்கட்கிழமை(4) கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான பேச்சாளராக (Resource Person) கத்தாரில் உள்ள ஹமட் பின் கலீபா பல்கலைக்கழகத்தின் (Hamad Bin Khalifa University – HBKU) பேராசிரியர் தீன் முகம்மது கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினார். அவர், இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவராகவும், வரலாற்று மற்றும் சமூக ஆய்வுகளில் முன்னோடியான இப்னு கல்தூனின் (Ibn Khaldun) பங்களிப்புகளை விரிவாக விளக்கினார்.
இப்னு கல்தூன் தனது புகழ்பெற்ற நூல் முகத்திமா (Muqaddimah) மூலமாக, சமூகங்கள் எப்படி உருவாகின்றன, வளர்ச்சி பெறுகின்றன மற்றும் சிதையுகின்றன என்பதற்கான ஒரு விஞ்ஞானக் கோட்பாட்டை முன்வைத்தார். இது சமூகவியல் என்ற துறையின் அடித்தளக்கல்லாகவே கருதப்படுகிறது என்பதை பேராசிரியர் தீன் முகம்மது வலியுறுத்தினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக, (Moderator) முன்னாள் உபவேந்தரும், சமூகவியல் துறையைச் சேர்ந்த கல்வியாளருமான பேராசிரியர் கலாநிதி அபூபக்கர் றமீஸ் பதவி வகித்து. நிகழ்வின் ஒழுங்கமைப்பு, அறிமுகங்கள் மற்றும் கலந்துரையாடல் அம்சங்களை சிறப்பாக வழிநடத்தினார். பின், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் இப்னு கல்தூனின் சிந்தனைகளை இன்றைய சமூகவியல் மற்றும் அரசியல் சூழலில் எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதற்கான புதிய பார்வைகளைப் பெற்றனர்.
இவ்வாறான கருத்துப் பரிமாற்றம் மற்றும் அறிவியல் உரைகள், மாணவர்களின் விமர்சனப் பயிற்சிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வரலாற்று மற்றும் சமூகவியல் துறைகளுக்கிடையிலான சங்கிலித் தொடர்புகளையும் வெளிக்கொணர உதவுகின்றன என்பதையும் நிகழ்வின் போது பலர் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் இறுதியில், பேராசிரியர் தீன் முகம்மதிற்கு நன்றியுரையுடன் கெளரவம் அளிக்கப்பட்டது. நிகழ்வு அறிவியல் நயமும், பண்பாட்டு பரிணாமத்தையும் ஒருங்கிணைத்த ஒரு முக்கியமான கல்வி நிகழ்வாக அமைந்தது.


