காத்தான்குடி பிரதேச சபையின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

காத்தான்குடி பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 2வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (29) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சென்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பேசி தீர்மானம் எடுக்கப்படுவதாகவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.

காணி , மீன்பிடி, கல்வி, மற்றும் மின்சார சபை, நகரசபை, நீர் வழங்கல், கால்நடை, போக்குவரத்து, சுகாதாரம், வைத்தியசாலை, வீதி அபிவிருத்தி, பொலிஸ் போன்ற முக்கிய துறைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இவ் ஆண்டின் ஒதுக்கீடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரினால் விளக்கக் காட்சிகள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ,காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ். எச். எம்.அஸ்பர் , உதவிப் பிரதேச செயலாளர் எம் .எஸ் சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா, கணக்காளர் சித்ரா, பிரதேச செயலகப் பிரிவின் திணைக்களத் தலைவர்கள் , பிரதேசத்தின் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.