பாறுக் ஷிஹான்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் “மக்களின் பணம் மக்களுக்காகவே” நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு காரைதீவு கலாச்சார மண்டபத்தில் புதன்கிழமை (23) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரனின் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளரும், காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் காரைதீவு கல்விக்கோட்டத்தின் 250 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கை கல்முனை வலயக் கல்வி அலுவலக நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
காரைதீவு சண்முகா மகா வித்தியாலய ஆசிரியர் வீ. விமலேஸ்வரன் வளவாளராக கலந்து கொண்டார்.
இங்கு நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன்,
நான் எனது பிரதேச சபையில் வருகின்ற கொடுப்பனவை கல்விக்காகவும் மற்றும் பல சேவைகளுக்கும் வழங்கி உதவுவேன். எனது முதல் கொடுப்பனவை வைத்து இந்த புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கை நடத்தியுள்ளேன். இது எனது முதலாவது வேலைத்திட்டம்.
இதைத் தொடர்ந்து நான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வேலைத்திட்டத்தை செய்ய உள்ளேன். அதற்காக நீங்கள் பூரண ஆதரவை தரவேண்டும். ஏனென்றால் நான் உங்களில் ஒருவராக இருப்பதால் உங்களுடன் இருந்துதான் நான் பயணிக்க வேண்டும். அதனால் நான் பல சேவைகளை செய்ய தயாராக உள்ளேன். அந்த சேவைகளுக்கு என்னுடன் சேர்ந்து எனது ஆதரவாளர்களும் துணையாக இருக்கின்றார்கள். எங்களுடன் இருந்து நீங்களும் பல சேவைகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்னுடைய இந்தப் பணியானது தொடர்ந்து செயற்படும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் முன்னாள் உப தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் உட்பட காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை செயலாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


