எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) இடம் பெற்றது.
மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கைத்தொழில் துறையினை ஊக்குவிக்கும் முகமாக மாவட்ட கைத்தொழில்துறை சம்மேளன குழுக்கூட்டம் இடம் பெற்றதுடன் கைத்தொழிலாளர்களின் அபிவிருத்தி மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் 2025 ஆண்டின் அரையாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்ட விடயங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் பெறுமதிசேர் பொருட்களை உற்பத்தி செய்து . ஏற்றுமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், துறைசார் நிபுணர்கள், திணைக்கள தலைவர்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், தேசிய தொழில் முயற்சி அதிகார சபை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


