தந்தை செல்வாவின் தலை துண்டிக்கப்பட்டது.

( வாஸ் கூஞ்ஞ) 15.06.2025

மன்னார் நகர் மத்தியில் மிகவும் கம்பீரமாக காட்சி அளித்து வந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி பிடித்தலின் எதிரொலியே இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியம் பேசி வந்த தமிழ் கட்சிகள் மன்னாரில் உள்ளுராட்சி மன்ற தலைவர் உப தலைவர் தெரிவில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்ற நோக்கில் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று அவைகள் தவிடு பொடியாகி விட்டதாக தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

இங்கு தமிழரசுக் கட்சி சில உள்ளுராட்சி மன்ற சபைகளில் மக்கள் தெரிவில் முன்னனியில் இருந்தபோதும் தமிழரசுக் கட்சியின் உட்பூசல் மற்றும் பொறுப்பற்றத் தன்மையாலும் இங்குள்ள ஐந்து உள்ளுராட்சி சபைகளிலும் ஒரு சபையையும் தனதாக்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமை (24) மன்னாரில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களpல் தலைவர் உப தலைவர் தெரிவில் தமிழரசுக் கட்சி ஒன்று அல்லது இரண்டையாவது கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோதும் தேசிய மக்கள் சக்தி , ஜனநாயக தமிழ் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையிலேயே மன்னார் நகரில் நீண்டகாலமாக கம்பீரமாக காட்சி அளித்து வந்த தந்தை செல்வாவின் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

விஷமிகளால் ஏற்பட்டுள்ள இச்சம்பவம் பின்னனியிலிருந்து ஏவப்பட்டே இது நடைபெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்pன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.