எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” எனும் கருப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (19) இடம் பெற்றது.
மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கான அனுசரணையை மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் சி.சிவவேணன் இரத்த தானம் வழங்குவதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் எமது மாவட்டத்தில் இரத்த வங்கியின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பிற மாவட்டங்களில் இருந்து குருதி பெற்றுக் கொள்வதை இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தில் எமது மாவட்டம் தலசிமியா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது.
இரத்த தானம் வழங்குவதற்காக பொலிசார், இராணுவத்தினர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சாரண மாணவர்கள் என பலர் கலந்துகொண்டதுடன், அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் இரத்த கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் 243 படைப்பிரிவின் கெனல் இந்திக குமார, இரத்தமாற்று வைத்திய நிபுணர் திருமதி டி. நிஷாந்தினி, மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின உப ஆளுனர் D-10 ரீ.ஆதித்தன், இரத்த வங்கியில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


