வாஸ் கூஞ்ஞ 11.06.2025
மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலை மோசமாகப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் இன்று (11.06) புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட உள்ளது .
இது தொடர்பாக நேற்றைய தினம் (10.06) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில்,
மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், தெரிவிக்கையில்,
“மன்னார் மக்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். காற்றாலை மின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளிப்பது போல் காணப்பட்டாலும் அவை நிறுவப்படும் இடங்கள் மக்கள் வாழும் பகுதிகளை நேரடியாகப் பாதிக்கின்றன,”
அதேபோல், மன்னார் தீவிலும் பெருநிலப் பகுதிகளிலும், அரச அனுமதியின்றியும் சமூக ஒப்புதலின்றியும் கனியமணல் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இதை நிறுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இதனை எதிர்த்து, மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் (11.06) புதன் காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் இருந்து மாபெரும் பேரணியை ஆரம்பித்து, மன்னார் பஜார் பகுதிக்கு சென்று , ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், “எமது வாழ்வுரிமையைப் பாதுகாக்க, பிரதேசவாதம் மதவாதமின்றி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்,” என மார்க்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


