தலைவர் பிறந்த மாதத்தில் தமிழினம் மேய்ச்சல் தரைக்காகப் போராடும் அவலநிலை! – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் வேதனை

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு; அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை

“கொழும்பில் இருந்து பதிலளிப்பதை விடுத்து, களத்திற்கு வந்து மக்களின் பிரச்சினைகளைப் பாருங்கள். இல்லையேல் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்” – சாணக்கியன் இராசமாணிக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைக் காணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் உரையாற்றிய அவர், வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் வடக்கு, கிழக்கு மக்களின் விவசாய நிலங்களும் கால்நடை மேய்ச்சல் காணிகளும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி வழங்கி வந்தாலும், இதுவரை முழுமையான காணி விடுவிப்பு இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மாறாக, புதிய காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி

கடந்த இரண்டு வருடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு மற்றும் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்களை மாவட்ட ரீதியாக வெளியிட வேண்டும் என சாணக்கியன் கோரினார்.

மேலும், காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முழுமையடையும் வரை புதிய காணிகளைக் கையகப்படுத்துவதையும் எல்லையிடுவதையும் அரசாங்கம் நிறுத்துமா எனவும் கேள்வி எழுப்பினார்.

தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், ஒரு மாதத்திற்குள் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்த போதிலும், மூன்று மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத காடழிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எங்கே?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத காடழிப்புகள் தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்கள் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காடழிப்புகள் தொடர்பில் GPS தொழில்நுட்பத் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விடயத்தில் உடனடி விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

மேய்ச்சல் தரைப் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மேய்ச்சல் தரைப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், ஒரே வனப்பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் தடைகள் விதிக்கப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பினார்.

அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய், திருகோணமலை மாவட்டத்தின் சின்னவில்லு, கட்டவானை, தம்பலகாமம் மற்றும் திவுலானை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பிரச்சினை தொடர்வதாகவும் தெரிவித்தார்.

மேய்ச்சல் தரைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் இதுவரை வர்த்தமானியில் அறிவிக்கப்படாததால் கால்நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கால்நடைகளை மேய்ப்பதற்கு ரூ.10,000 – ரூ.20,000 வரை பணம் கோரப்படுவதாகக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கருவாச்சோலை பகுதியில் தமிழ் மக்கள் தமது கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்வதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை பணம் கோரப்படுவதாக சாணக்கியன் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

பணம் வழங்காவிட்டால் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒரே நாட்டில் ஒரே சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

யானைத் தாக்குதல்களைத் தடுக்க மின்வேலிகள் அமைக்கப்படுமா?

வடக்கு, கிழக்கு மக்களை அச்சுறுத்தும் யானைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக கிராமங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் மின்வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் கால அட்டவணையை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் கோரினார்.

“இனத்திற்காகவும் தமிழீழத்திற்காகவும் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடுகிறது”

தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழினத்தின் அரசியல் மற்றும் வரலாற்றுப் போராட்டங்களை நினைவுபடுத்தி தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தலைவர் பிறந்த மாதத்தில், இனத்திற்காகவும் தமிழீழத்திற்காகவும் போராடிய ஒரு இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒரே பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கு இடையூறுகள் இன்றி அனுமதிக்கப்படுவதாகவும், தமிழ் மக்கள் அதே பகுதிகளுக்குள் கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“கொழும்பில் இருந்து வழங்கும் பதில்களுக்கும் கள யதார்த்தத்துக்கும் பாரிய வேறுபாடு”

அரசாங்கம் கொழும்பில் இருந்து வழங்கும் பதில்களுக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாகச் சாணக்கியன் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் பதில்கள் நடைமுறையில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் நிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களின் பிரச்சினைகளைத் தொலைவில் இருந்து கேட்டறிந்து பதிலளிப்பதை விடுத்து, நேரடியாகக் களத்திற்கு வந்து நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அவ்வாறு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், காணி விடுவிப்பு மற்றும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்கு இனியும் காலதாமதமின்றித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்