கண்டலடியில் இடம்பெறும் மாவீரர் தின ஏற்பாடுகளை பா.உ சிறிநாத் நேரில் சென்று பார்வை…

மாவீரர் தினத்தை முன்னிட்டு கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் முன்னாயத்தச் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.

​இதன்போது, துயிலும் இல்ல வளாகத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஏற்பாட்டுக் குழுவினருடன் அவர் விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டார்.

நினைவேந்தல் நிகழ்வுகளை எவ்வித இடையூறுகளுமின்றிச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்துவது தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவினருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், பணிகளைத் துரிதப்படுத்துவது மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான தனது ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

​மேலும், அர்ப்பணிப்புடன் முன்னாயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினருக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், நினைவேந்தல் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

குறித்த விஜயத்தின் போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், கா.நாகேந்திரன், வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான மோகன் , சுவேந்திரன் ஆகியோர் மற்றும் சமூக சேவை செயற்பாட்டாளரான குகதாசன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.