நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பாடசாலை கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் கலைஞர் அஸ்வான் ஸக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி கௌரவ அதிதியாகவும், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், எதிர்காலத்தில் மேலும் பல கல்விச் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


