சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு தாயக செயலணி இரங்கல்

ஒப்பற்ற தமிழ்தேசிய கொள்கை பற்றாளரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளியாக இணைந்து பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் ஊடாக பிரதேசசபை, மாகாணசபை, பாராளுமன்றம் என மூன்று வகை மக்கள் அரங்கையும் அலங்கரித்த மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு செய்தி தாயக மக்களுக்கு பேரிடியாகவே இருந்திருக்கும்.

என்றும் ஈழவிடுதலைக் கொள்கை மாறாத போராளியின் மறைவுக்கு தாயக செயலணியின் கண்ணீர் வணக்கங்கள்.

முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை பிரதேசசபைத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் (14) சுகயீனம் காரணமாக இயற்கை எய்தியமைக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தாயக செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், தமிழீழ கொள்கையிலும், சிந்தனையிலும் தீவிர பற்றுறுதி கொண்டவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டிதுறை பிரதேச சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஐயா அவர்களின் மறைவிற்கு தாயக செயலணியின் சார்பில் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இழப்பால் துயரப்படும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் மன சாந்தி கிடைக்க வேண்டுவதோடு, அன்னாரின் ஆத்ம சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய போராளியை சாவு ஒருபோதும் வென்றுவிட முடியாது.

அன்னாரின் கொள்கைகளும், அவர் முன்நிறுத்திய தமிழீழ இலட்சியமும் எமது இறுதி இலட்சியம் அடையும் வரை எமது இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.