போரதீவுப் பற்று ( வெல்லாவெளி) பிரதேச சபையின் 2027ம் ஆண்டிக்குரிய திட்டங்களை உள்வாங்கும் முகமாக பிரதேச சபையின் 10 வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக மட்ட அமைப்புகள், சனசமூக நிலைய நிருவாகத்தினருடான கலந்துரையாடல் இன்றைய தினம் பிரதேசசபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உபதவிசாளர், செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2026ம் ஆண்டு பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், தவிசாளர் முயற்சியூடாக முன்னெடுக்கப்பட்ட நிதி சேர்க்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், 2027ம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்வாங்கும் பொருட்டு பிரதேசங்கள் சார் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சமூக மட்ட அமைப்புகளின் கருத்துகள், முன்மொழிவுகள் மொழியப்பட்டன.
இதன்போது பிரதேச ரீதியான குறைகள் தொடர்பிலும் தவிசாளரினால் கோரப்பட்டதையடுத்து சமூக மட்ட அமைப்புகளால் விடுக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பிலான தெளிவூட்டல்கள், அதனை நிவர்த்திக்கும் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை 2027ம் ஆண்டு சபையூடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு பொதுவான பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் தெளிவிபடுத்தப்பட்டதுடன், வட்டார ரீதியாக சமூக அமைப்புகளினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகத் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


