உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ்!

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள் நாளை(11) இலங்கை வருகிறார்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் 22 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

இந்தியாவின் கொல்கத்தா அருகே அமைந்துள்ள பேலூர் மடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவர்களில் ஒருவராகத் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

பக்தர்களால் அன்புடன் “சனாதன் மகராஜ்” என்று அழைக்கப்படும் இவர், பல தசாப்தங்களாக ராமகிருஷ்ண இயக்கத்தின் நிர்வாகத்திலும், ஆன்மீக வழிகாட்டுதலிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.

துறவு வாழ்க்கையும் உயர்வும்

இளம் வயதிலேயே ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ண சங்கத்தில் இணைந்தவர் சுவாமி சுஹிதானந்தஜி.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உதவிச் செயலாளராக (Assistant Secretary) பணியாற்றி, சங்கத்தின் அன்றாட நிர்வாகம், கிளை மடங்களின் வளர்ச்சி, நிவாரணப் பணிகள் ஆகியவற்றைக் கவனித்து வந்தார்.

2012 ஆம் ஆண்டு, சங்கத்தின் பொதுச் செயலாளராக (General Secretary) பொறுப்பேற்றார். இந்தப் பதவி என்பது சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போன்றது. புதிய கிளைகள் திறப்பது, கல்வி, மருத்துவம், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது அனைத்தும் இவரது தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவரது அனுபவத்தையும், ஆன்மீக முதிர்ச்சியையும் கருதி, துணைத் தலைவராக (Vice-President) உயர்த்தப்பட்டார். ராமகிருஷ்ண மடத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தான் பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கும் ஆன்மீக குருக்களாகத் திகழ்கிறார்கள்.

போதனைகள்

சுவாமி சுஹிதானந்தஜியின் போதனைகள் மிக எளிமையானவை, ஆனால் ஆழமானவை:

நல்ல வேலை, அதிக சம்பளம் மட்டும் வாழ்க்கை அல்ல. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டு, சமூகத்திற்குப் பயனுள்ள செயல்களில் ஈடுபடுங்கள். அப்போதுதான் சிறந்த குடிமகனாக முடியும்.”

“ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அனைவரும் ஏழைகளுக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். அதே இலட்சியத்தில் தான் இன்றும் மடமும் மிஷனும் செயல்படுகிறது.”

2025 செப்டம்பரில் மங்களூரு ராமகிருஷ்ண மிஷனின் 75 ஆவது அமிர்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, இளைஞர்களுக்கு தூய்மை, நேர்மறை சிந்தனை, சேவை மனப்பான்மை பற்றி உரையாற்றினார். அதே விழாவில் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் விவேகானந்த பயிற்சி மையத்தின் புதிய அமிர்த பவனை திறந்து வைத்தார்.

ஒரு அமைதியான ஆன்மீகத் தலைவர்

பகட்டு இல்லாத எளிமை, ஆழ்ந்த அமைதி, அனைவரிடமும் அன்பு – இவையே சுவாமி சுஹிதானந்தஜியின் அடையாளங்கள்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கி, அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் “எத்தனை கருத்துக்கள், அத்தனை பாதைகள்” என்ற கொள்கையையும், விவேகானந்தரின் “மனித சேவையே இறை சேவை” என்ற கொள்கையையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்பவர்களில் இவர் முதன்மையானவர்.

2017ஆம் ஆண்டு இப்பொறுப்புக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, அவர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் எட்டாவது தலைவரான பூஜ்யபாத சுவாமி விசுத்தானந்தஜி மகராஜ் அவர்களிடம் மந்திர தீட்சை பெற்ற சுவாமி சுஹிதானந்தஜி, 1958ஆம் ஆண்டு சார்காச்சி மடத்தில் ராமகிருஷ்ண சங்கத்தில் இணைந்தார். பின்னர், சங்கத்தின் பத்தாவது தலைவரான பூஜ்யபாத சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களிடமிருந்து 1970ஆம் ஆண்டு சந்நியாச தீட்சை பெற்றார்.

இடைப்பட்ட காலத்தில், ஸ்ரீ சாரதா தேவியாரின் மகத்தான துறவிச் சீடர்களில் ஒருவரும், ஆழ்ந்த ஆன்மிக ஞானமும் உயர்ந்த ஆன்மிக அனுபூதியும் பெற்றவருமான சுவாமி பிரேமேஷானந்தஜி மகராஜ் அவர்களுக்குச் சேவை செய்யும் அரிய பேற்றினையும் பெற்றார்.

சுவாமி சுஹிதானந்தஜி அவர்கள், கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள ராமகிருஷ்ண சங்கத்தின் புகழ்பெற்ற ரஹரா மற்றும் நரேந்திரபூர் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மிஷனின் உறைவிடப் பள்ளியில் முதல்வராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.

இக்காலகட்டத்தில், 1995ஆம் ஆண்டு ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், ராமகிருஷ்ண மிஷனின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1997ஆம் ஆண்டு தேவ்கரிலிருந்து பேலூர் மடத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு, உதவிப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

பின்னர், 2012ஆம் ஆண்டு பொதுச் செயலாளர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.

பொதுச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், ராமகிருஷ்ண–விவேகானந்த இயக்கத்தின் இலட்சியங்களையும் செய்தியையும் உலகெங்கும் பரப்பும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் விரிவான பயணங்களை மேற்கொண்டார்.

துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் பல்வேறு கிளை நிலையங்களுக்குச் சென்று ஆன்மிகப் பணிகளை ஆற்றியதுடன், வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார்.

அந்நாடுகளில் பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கியும், ஸ்ரீ ராமகிருஷ்ண–விவேகானந்தரின் உயரிய இலட்சியங்களைப் பரப்பியும் அரும்பணியாற்றி வருகிறார்.

ராமகிருஷ்ண சங்கத்தின் இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள சுவாமி சுஹிதானந்தஜி அவர்கள், வங்காள மொழியில் முசாஃபிரேர் காந்த்ரி (Musafirer Ganthri), சார்காச்சிர் ஸ்மிருதி (Sargacchir Smriti) ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சார்காச்சிர் ஸ்மிருதி நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

மேலும், ஸ்ரீதரரின் உரையுடன் கூடிய பகவத் கீதையின் வங்காள மொழிப் பதிப்பை வெளியிடுவதிலும் அவர் சிறப்புப் பங்காற்றியுள்ளார். அப்பதிப்பில், ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருத்தமான சுவாமி பிரேமேஷானந்தஜி மகராஜ் அவர்களின் அருளுரைகளையும் கருத்துரைகளையும் இணைத்துள்ளார்.

அவரது வருகை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பல.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு