சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு வழக்குத் தொடுநர் திணைக்களம் தீர்மானம்!

சவுதி அரேபியாவில் முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு சவுதி அரேபியாவின் அரசுத் தரப்பு வழக்குத் தொடுநர் திணைக்களம் (Public Prosecution) தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் அவரது முழுமையான விடுதலை உறுதியாகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நற்செய்தியைத் தொடர்ந்து, சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அனோஜனின் குடும்பத்தினரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளனர்.

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா (27), சமூக வலைதளப் பதிவு ஒன்றில் இடம்பெற்ற கருத்து காரணமாகக் கைது செய்யப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

சிவராசா அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீவிர தூதரக மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சொலிசிட்டர் ஜெனரல் அசர்ட் நவாவி தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு சவுதி அரேபியாவுக்குச் சென்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பிலிருந்தும் முறையீடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சவுதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சட்டப் போராட்டங்களின் பலனாக மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன், தற்போது அரசுத் தரப்பு வழக்குத் தொடுநர் திணைக்களம் வழக்கை முற்றிலுமாக கைவிட தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டத் துணை நின்ற அனைத்துத் தரப்பினருக்கும், அரச அதிகாரிகளுக்கும் மற்றும் குரல் கொடுத்த பொதுமக்களுக்கும் அனோஜனின் குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.