( ஷீரடியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை புண்ணிய மண்ணில் கலியுக தெய்வம் கந்தப்பெருமானின் அருள் பெருகும் வகையில், திருக்கோவில் தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள சீரடி கருணாலயத்தில், ஸ்ரீ கார்த்திகேயா முருகர் ஜம்பொன் சிலை இன்று (11.11.2026) புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள், கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல சொற்பொழிவாளர் முருகனருட் செல்வர் ஜெயம் எஸ்.கே.கோபியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அற்புத நிகழ்வில், ஷீரடி சாய்பாபா கருணாலய ஸ்தாபகர் திருமதி சீதா விவேக்( நோர்வே) கலந்து சிறப்பித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தலைவர் கி.ஜெயசிறில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முருகர் சொந்தங்கள் கலந்து கொண்டு, முருகனின் அருள் பெற்றனர்.
தமிழ் வேதங்கள் ஒலிக்க, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல சொற்பொழிவாளர் முருகனருட் செல்வர் ஜெயம் எஸ்.கே.கோபி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள், இது இலங்கை முருக பக்தர்களுக்கு ஒரு மறக்க முடியாத புனித நாள் என்றும், தாமரைக்குளம் சீரடி கருணாலயம் திருக்கோவில் இனி முருக பக்தர்களின் குறிப்பாக கதிர்காம பாதயாத்திரை அடியார்களுக்குமுக்கிய வழிபாட்டுத் தலமாகவும் திகழும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஷீரடி சாய்பாபாவிற்கான விசேட ஆராதனையும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.


