வடக்கிலும் கால்பதித்தது BYD: யாழ்ப்பாணத்தில் புதிய 3S சேவை மையம் திறப்பு!

இலங்கையின் புதிய சக்தி வாகனச் சந்தையில் (New Energy Vehicles) முன்னணி நிறுவனமாகத் திகழும் BYD, வடமாகாணத்திலும் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் தனது புதிய 3S (விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய மையம், நேற்று (நவம்பர் 11) புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

BYD நிறுவனத்தின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனமும், A9 Motors நிறுவனமும் இணைந்து இந்தச் சேவை மையத்தை நிறுவியுள்ளன. இதன் மூலம் வடமாகாண வாடிக்கையாளர்கள் BYD வாகனங்களின் விற்பனை, பராமரிப்புச் சேவைகள் மற்றும் உதிரிப்பாகங்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில் John Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) திரு. சரித் பண்டிதரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அத்துடன், A9 Motors நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. குவைத் மற்றும் திரு. அகிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேலும், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான கிரிஷன் பெர்னாண்டோ (விற்பனைப் பிரிவுத் தலைவர்), சதுரங்க கஹவத்த (விற்பனைக்குப் பின்னரான சேவைப் பிரிவுத் தலைவர்), மினோஷலா நிசங்க (சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர்) மற்றும் சச்சித்ர வீரசிங்க (விற்பனையாளர் வலையமைப்பு முகாமையாளர்) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையில் மின்சார மற்றும் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், வடபகுதி மக்களுக்கும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். A9 Motors உடனான இந்தக் கூட்டாண்மையின் ஊடாக, வடமாகாண வாடிக்கையாளர்களின் நீண்டகால வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், விரைவானதும் நம்பகமானதுமான விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்க முடியும் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்க நடவடிக்கையானது வடமாகாணத்தின் வாகனப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்யும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.