மைலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட செயலாளரின் தலைமையில் களவிஜயம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடந்த 2026.11.01ஆம் திகதியன்று பொலிஸ் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையும், அதனைத் தொடர்ந்து 2026.11.02ஆம் திகதி கால்நடை பண்ணையாளர்களால் மாவட்ட செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் தழுவி, 2026.11.03ஆம் திகதியன்று மைலத்தமடு – மாதவனை பிரதேசத்திற்கு விசேட களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்களவிஜயத்தில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லிலாரத்ன, உதவி மாவட்ட செயலாளர் G. பிரணவன், மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம் மற்றும் மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதேசத்தில் மகாவலி அதிகாரசபையினால் அடையாளப்படுத்தப்பட்ட 1,570 ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் தரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம், கடந்த 2026.05.20ஆம் திகதி இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்குமிடையே நிலவும் முரண்பாடுகளைத் தணித்து, தற்காலிக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதே இக்களவிஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

இக்களவிஜயத்தின் போது பின்வரும் முக்கிய முடிவுகளும் ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன:

கால்நடை பண்ணையாளர்களின் முறைப்பாடுகளுக்கு பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்தல்.அப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடுத்துதல்.கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சட்டவிரோத மின்சார வேலிகள் அமைப்பதைத் தவிர்த்தல்.பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாம்களில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படும் வரை, பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வனவள திணைக்களத்திற்குட்பட்ட தற்காலிகமாக அடையாளங்காணப்பட்ட வனப் பகுதிகளில் கால்நடைகளை மட்டும் மேய்ப்பதற்கு வனவள திணைக்களத்தினர் அனுமதித்துள்ளனர்

பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படும் வரை, பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மகாவலி மற்றும் வனவள திணைக்களத்திற்குட்பட்டு தற்காலிகமாக அடையாளங்காணப்பட்ட நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்குப் பயன்படுத்த அனுமதித்தல்.

பிரதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையைச் சீர்செய்து, பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென இதன்போது அறிவுறுத்தப்பட்டது.