சூரிச்சில் தொலைபேசி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கவிருந்த இரு முதிய பெண்கள், உரிய நேரத்தில் உதவியை நாடியதால் பணத்தை இழப்பதிலிருந்து தப்பியுள்ளனர். இரு சம்பவங்களிலும் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வங்கியில் சந்தேகப் பரிவர்த்தனை எனப் பொய்த்தகவல்
சூரிச் Kreis 7 பகுதியில் வசிக்கும் 68 வயதுப் பெண்ணைத் தொடர்புகொண்ட இருவர், தங்களை வங்கி ஊழியர் என்றும் பொலிஸ் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவரது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றக் கோரிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவரது சேமிப்புப் பணம் கள்ளநோட்டுகளாக இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பல ஆயிரம் பிராங்குகளை வங்கியிலிருந்து எடுத்து, தாங்கள் அனுப்பும் போலிப் பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
மோசடியைப் புரிந்துகொண்ட பெண், தனது வங்கிக்குத் தகவல் வழங்கியுள்ளார். வங்கி பொலிஸாரைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து, பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 22 வயது ஸ்பெயின் பிரஜை கைது செய்யப்பட்டார்.
50,000 பிராங்க் கோரல்: அயலவரின் உதவியால் தப்பிய பெண்
மற்றொரு சம்பவத்தில், Kreis 9 பகுதியில் வசிக்கும் 82 வயதுப் பெண்ணிடம் 50,000 பிராங்குகளை ஒப்படைக்குமாறு தொலைபேசியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அயல்வீட்டுப் பெண்ணின் உதவியுடன் அவர் பொலிஸாரைத் தொடர்புகொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 18 வயது உக்ரைன் பிரஜையான பெண் கைது செய்யப்பட்டார்.
“பொலிஸார் தொலைபேசியில் பணம் கேட்க மாட்டார்கள்”
உறவினர் அவசர நிலையில் இருப்பதாகக் கூறுதல், விபத்து நடந்ததாக அச்சுறுத்துதல், பொலிஸ் அல்லது வங்கி அதிகாரிகளாக நடிப்பது போன்ற பல வழிகளில் மோசடிக்காரர்கள் பணம் பறிக்க முயல்வதாகச் சூரிச் நகரப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
- சந்தேகமான அழைப்பு வந்தால், உரையாடலை நிறுத்திவிட்டு 117 இலக்கத்திற்குத் தகவல் வழங்குங்கள்.
- அறிமுகமில்லாதவர்களிடம் பணம், நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களை ஒப்படைக்காதீர்கள்.
- தொலைபேசியில் கூறப்படும் இடங்களில் பணத்தையோ பெறுமதியான பொருட்களையோ வைத்துவிட்டுச் செல்லாதீர்கள்.
- தொழில்நுட்ப உதவியாளர் எனக் கூறும் அறிமுகமில்லாதவர்களுக்கு உங்கள் கணினியைத் தொலைவிலிருந்து இயக்க அனுமதிக்காதீர்கள்.


