பெறுமதிமிக்க ஓர் இளைய தலைமுறையை நாம் சுவிட்ஸர்லாந்து மண்ணுக்கு வழங்கியுள்ளோம்..

 செங்காலன் மாநகர தலைவர் துரைராஜா ஜெயக்குமார்

சுவிட்ஸர்லாந்து மண்ணுக்கு நாம் வழங்கியிருப்பது பெறுமதிமிக்க ஓர் இளைய தலைமுறை எமது மூத்த தலைமுறை என்னென்ன அனுபவங்களைக் கடந்து வந்தது என்பதை இந்த இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமை எமக்கிருக்கிறது அந்தப் பணியைத்தான் கமலினி கதிர் இந்தப் புத்தகத்தின் மூலம் செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என செங்காலன் மாநகர தலைவர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவித்தார்.

எழுத்தாளர் கமலினி கதிர் எழுதிய தேடல்கள் 2 நூல் அறிமுகவிழா சூரிச்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில்

 சுவிட்ஸர்லாந்தில் எமது மூத்த தலைமுறையினர் விதைத்த விதைகள் இன்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

வெறும் 38 வருடங்களில் இவ்வாறான ஒரு நிலையை எவ்வாறு அடைய முடிந்தது என்று கேட்டால், அதற்குப் பின்னால் இருப்பது நமது உழைப்பும், சிந்திய வியர்வையும், கடந்து வந்த பாதையும்தான்.

நீங்கள் விதைத்த விதைகள் இன்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

என்னைத் தொடர்புகொள்ளும் இளையவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் சிறுவர்களாக இருந்த காலம் நினைவுக்கு வருகிறது. அன்று என்னை ‘ஜெயக்குமார் அங்கிள்’ என்று அழைத்த பிள்ளைகள், இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலைகளில் இருக்கிறார்கள். நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளாகவும், பெரிய பொறுப்புகளில் தலைமைத்துவம் வகிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த மண்ணுக்கு நாம் வழங்கியிருப்பது பெறுமதிமிக்க ஓர் இளைய தலைமுறை.

எமது மூத்த தலைமுறை என்னென்ன அனுபவங்களைக் கடந்து வந்தது என்பதை இந்த இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. அந்தப் பணியைத்தான் அக்கா இந்தப் புத்தகத்தின் மூலம் செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், இந்த நூலை மொழிபெயர்த்த சகோதரருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சுவிட்சர்லாந்தில் வாழும் நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழைக் கற்பிக்கிறீர்கள். ஆனால் மற்ற நாடுகளில் எல்லோருக்கும் இதே வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறானவர்கள் இந்த நூலை வாசிப்பதற்கு ஆங்கிலம் ஒரு சிறந்த ஊடகமாக அமைகிறது. அந்த வகையில், இதனை மொழிபெயர்த்த சகோதரருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொரு விடயத்தையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நான் உங்களில் ஒருவன். எனவே, என்னுடன் கதைப்பதற்கோ, பேசுவதற்கோ, தொடர்புகொள்வதற்கோ நீங்கள் தயங்க வேண்டியதில்லை.

எனக்கு வந்த பல தொடர்புகளுக்கு இம்முறை பதிலளிக்க முடியாமல் போயிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். ஒன்றிணைந்து உழைப்போம். நாம் அடைய வேண்டிய உயரங்கள் இன்னும் பல இருக்கின்றன. எம்மை அந்த உயரங்களுக்கு அழைத்துச் செல்லப்போவது எமது அடுத்த தலைமுறைதான். அந்தத் தலைமுறையினர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நான் ஓர் எழுத்தாளனோ பேச்சாளனோ அல்ல. மக்கள் கொண்டாடும் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்பதையும், அவர்களது மகிழ்ச்சியில் பங்குகொள்வதையும், உழைத்தவர்களுக்கு மதிப்பளிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறேன்.

எல்லா இடங்களுக்கும் செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை. பல இடங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலையும் இருக்கிறது. நீங்கள் அழைத்த நிகழ்வுகளுக்கு என்னால் வர முடியாமல் போயிருந்தால், அதற்காகவும் இந்தத் தருணத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.