‘எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது எனத் தெரிவித்தார்.

எனினும், தற்போது பேருந்து தொழிலை நஷ்டத்திலேயே நடத்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறுகிய தூர சேவைகளில் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நெடுந்தூர சேவைகளில் நாளொன்றுக்கு 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “டீசல் விலை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது. தற்சமயம் டீசல் லீற்றர் ஒட்டுமொத்தமாக 15 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பேருந்து தொழிலுக்குப் பாரிய நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது.

எனினும், கொள்கை ரீதியான தீர்மானத்தின்படி, விலை சூத்திரத்தின் அடிப்படையில் 4 சதவீத நிலையை அடைந்தால் மட்டுமே எங்களால் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியும். தற்போதைய நிலையில் அந்த 4 சதவீத வீதம் எட்டப்படவில்லை.

எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்த சட்டரீதியாக எங்களுக்கு அதிகாரம் இல்லை. எவ்வாறாயினும், தற்போதைக்கு நாங்கள் இந்தப் பேருந்து தொழிலை நஷ்டத்துடனேயே கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.