4,600-க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சைகளை மேற்கொண்ட இதயம் உள்ள வைத்தியசாலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைதான் அந்த இதயம் உள்ள வைத்தியசாலை.

மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் கிரான்குளம் எனும் அமைதியான கிராமத்தில், 56 ஏக்கர் பசுமையான நிலப்பரப்பில் ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.

அதுதான் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி அதி விசேட வைத்தியசாலை. இதனை மக்கள் அன்போடு “இதயம் உள்ள வைத்தியசாலை” (The Hospital With a Heart) என்று அழைக்கின்றனர்.

ஏனெனில் இந்த வைத்தியசாலையில் பணம் வாங்கும் இடம் (Cash Counter) என்று ஒன்றே கிடையாது.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகள் பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். ஆனால், நாடு முழுவதும் இரண்டு வைத்தியசாலைகளில் மட்டுமே சிறுவர்களுக்கான இதய சிகிச்சைப் பிரிவு உள்ளது. இதனால் ஒரு சிறு இதய அறுவை சிகிச்சைக்கு கூட இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலம் இருந்தது. இந்த ஏக்கத்தை 2017 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வந்த சற்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்கள் அறிந்து கொண்டார். உடனே உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த மாபெரும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் முதற்கட்ட கட்டுமானம் நிறைவடைந்து 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் சற்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இங்கு நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 25 படுக்கைகள் கொண்ட விடுதி என அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த வைத்தியசாலையின் மிகப்பெரிய பெருமை 2023 ஜூன் 1 அன்று கிழக்கு மாகாணத்திலேயே முதன்முறையாக இங்கு அமைக்கப்பட்ட Cath Lab ஆகும். அமெரிக்காவின் Divine Will Foundation வழங்கிய Philips Azurion 7M12 என்ற அதிநவீன கருவி மூலம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுடன் இணைந்து இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இன்று இந்த வைத்தியசாலை வெறும் கட்டிடம் அல்ல. அரச வைத்தியசாலையில் பல வருடங்கள் காத்திருந்த ஏழை தாயின் கண்ணீரை துடைக்கும் ஆலயமாக, கிழக்கின் இதயத்துடிப்பாக விளங்குகிறது.
ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் சேவைகள் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களின் அருளாசி மற்றும் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலையின் தலைவர் திரு. தீபல் விக்ரமசிங்க, முன்னாள் தலைவர் திருமதி பென்னி ஜெயவர்தன சமகாலத்தில் நிருவாக சேவைகளை திறம்பட முன்னெடுத்து வரும் பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டர் மற்றும் பணிப்பாளர் சபையினர் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்புடனும் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், கல்முனை ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு இந்நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் அங்கு நேரடியாக விஜயம் செய்துபொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டரிடம் இந்த மனிதாபிமான சேவை பற்றி கேட்டபோது…

இதய சிகிச்சை பெற விரும்புவோர் இனமத பேதமற்று இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊடாக இங்கு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தினமும் வெளிநோயாளர் பிரிவு காலை 9 மணியிலிருந்து 01 மணி வரை பூரணமாக இயங்கி வருகின்றது.

அதைவிட “அன்னபூரணா” என்கின்ற அன்னதான நிகழ்வு தினமும் நடைபெற்று வருகின்றது.

இந்த பகுதியில் இருக்கக்கூடிய வசதி குறைந்த 150 பேருக்கு தினமும் பார்சலில் உணவு ஓட்டோவில் சென்று வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றது. அதைவிட இங்கு சிகிச்சைக்கு மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வருவோருக்கும் இலவசமாக பொருத்தமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைவிட அடுத்த வருடம் பெரும்பாலும் இதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அதற்கு மேலும் பல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு நிதியுதவி தேவையானது என்றும் சொன்னார்.

கணக்காளர் பிரேம்குமார், திட்ட அலுவலர் பிரதீபன், உத்தியோகத்தர் வேணு உள்ளிட்ட நிருவாகத்தினர், அங்குள்ள அனைத்து பிரிவுகளையும் சிகிச்சை கூடத்தையும் புதிதாக உருவாக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூட வசதிகள் அவசரசிகிச்சைப் பிரிவு வெளிநோயாளர் பிரிவு போன்றவற்றை கனிவாக எடுத்துக் கூறி காட்டினார்கள். அன்பான உபசரிப்பும் இடம்பெற்றது.

“ஒரே உலகம் – ஒரே குடும்பம்” என்ற உயரிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையை வழங்கி வரும் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் இதுவரை 4,600-க்கும் மேற்பட்ட இலவச Cardiac Cath Interventions மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தையின் இதயத் துடிப்பைப் பாதுகாப்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்குச் சமமானது. அந்த உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி இவ்வைத்தியசாலை செயற்படுகின்றது.

இலவச மருத்துவச் சேவை: மனிதநேயத்தின் அடையாளம்
இந்த வைத்தியசாலையின் தனித்துவம் அதன் நவீன மருத்துவக் கட்டமைப்பில் மட்டுமல்ல; பொருளாதார வசதியற்ற மக்களுக்கும் மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்கும் கொள்கையிலும்தான் உள்ளது.
நன்கொடையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுடன் இயங்கும் இந்நிறுவனம், இதய நோய்களுக்கான சிகிச்சைகளைப் பொருளாதாரத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு