தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வதை சாட்டாக வைத்து மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற வாரத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஆஜராகி உரையாற்றுகையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் பாராளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“தேர்தலை முதலில் நடத்துங்கள்”
கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் உறுதியான கோரிக்கை என்றார்.
“தேர்தல் முறைமையில் மாற்றங்கள் அவசியமாக இருந்தால், முதலில் தேர்தலை நடத்திவிட்டு அடுத்த தேர்தலுக்கு முன்னதாக தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதை விடுத்து, எல்லை நிர்ணயம் மற்றும் சட்ட மாற்றங்களைக் காரணம்காட்டி தேர்தலை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.”
— எம்.ஏ. சுமந்திரன் (ஜனாதிபதி சட்டத்தரணி)
புதிய தொகுதிகள் அல்லது தேர்தல் வட்டாரங்களை உருவாக்கி எல்லை நிர்ணயம் செய்யும் பணிகள் நீண்டகாலம் எடுக்கக்கூடும் என்பதால், அதனைத் தேர்தலைத் தாமதிப்பதற்கான காரணியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் விளக்கினார்.
பழைய முறையைப் பின்பற்ற முன்மொழிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான சட்ட மாற்றங்களின்போது, ஏற்கனவே அமலிலிருந்த தேர்தல் தொகுதிகள் மற்றும் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார். அதே நடைமுறையைப் பின்பற்றி மாகாண சபைத் தேர்தலையும் தாமதமின்றி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஏதுவாக, ஏற்கனவே முன்வைக்கப்பட்ட தனிநபர் சட்டமூலங்கள் மற்றும் முந்தைய பாராளுமன்றங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும் தெரிவுக்குழுவிடம் அவர் சமர்ப்பித்தார். இத்தனிநபர் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான வழியை ஏற்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயத் திருத்தங்களைப் பின்னராகப் பரிசீலிக்கலாமே தவிர, அவற்றுக்காக மாகாண சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைக்கக் கூடாது என்பதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும்.


