காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ளக விவகாரப் பிரிவு –( Internal Affairs Unit -IAU) அறிமுகம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை உரிய முறையில் கையாள்வதற்கும் அரச சேவைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் உள்ளக விவகாரப் பிரிவு (Internal Affairs Unit – IAU) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜூத் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி .எஸ். சில்மியா மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். ரவூப்
ஆகியோரின் முன்னிலையில் இப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரிவின் ஊடாக பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் தமது கருத்துக்களை உரிய வழிமுறைகளில் முன்வைக்க முடியும். கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை உரிய முறையில் கவனத்தில் கொண்டு, அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தொடர்பாடல் வழிமுறைகளை இப்பிரிவு பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

முறைப்பாடுகளை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பிரதேச செயலகத்திற்கு நேரடியாக வருகை தந்து முறைப்பாடுகளை முன்வைத்தல், தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுதல், மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை அனுப்புதல், WhatsApp ஊடாகத் தகவல்களைப் பகிர்தல், பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துதல், பயனரில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து முறைப்பாட்டைச் சமர்ப்பித்தல், கடிதம் அல்லது முறைப்பாட்டுப் பெட்டி ஊடாக முறைப்பாடுகளை முன்வைத்தல் ஆகிய வழிமுறைகளில் சமர்ப்பிக்க முடியும்.

தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 065 222 6591, WhatsApp: 077 900 2891, மின்னஞ்சல்: [email protected], இணையதளம்: www.kattankudy.ds.gov.lk, முகவரி: பிரதேச செயலகம், காத்தான்குடி. ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும்போது சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதுடன், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை முறைப்பாடுகளாக முன்வைப்பதைத் தவிர்ப்பதும் முக்கியமாகும்.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் இலகுவாக முன்வைத்து, அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தி, வினைத்திறனான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.