மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விட்டு வெளியேற பண்ணையாளர்கள் தீர்மானம்!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விட்டு வெளியேற பண்ணையாளர்கள் தீர்மானம்! மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திற்கு பாதிப்பு?
அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்தும் அங்கு கால்நடைகளை பராமரிக்க முடியாத காரணத்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் இருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதிக்கு கால்நடைகளை கொண்டுவர உள்ளதாக பண்ணையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு வை. எம். சி. ஏ மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதே நேரம் மட்டக்களப்பில் தற்போது பெரும்போக விவசாய நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் இருந்து கால்நடைகளை மட்டக்களப்பு நோக்கி கொண்டுவருவதால் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் கோரிக்கைகள், பண்ணையாளர்களின் கால்நடை குறித்து மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாது மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ம், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் சட்டவிரோதமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களை வெளியேற்ற தவறிய அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ,இரா சாணக்கியன் , மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சரவணபவான், ஏறாவூர் பற்று தவிசாளர் மு.முரளிதரன், வாழைச்சேனை தவிசாளர் சுதாகரன், தமிழ் தேசிய முன்னணியின் அமைப்பாளர் சுரேஸ், ஊடகவியலாளர் செ.நிலாந்தன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பண்ணையாளர்கள் என 15 பேர் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கியதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என அனைத்து கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி மகாவலி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் எதிராக செயற்பட்டு உள்ளதால் இதற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.