எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்கான அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வொன்று இன்று (15.10.2026) மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் A.S.M. ஸியாத் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இச்செயலமர்வில், தற்போதைய எல் நினோ (El Niño) காலநிலை நிலைமை மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், பாடசாலைகளில் வெள்ளம், சூறாவளி உள்ளிட்ட அனர்த்தங்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், அனர்த்தங்களின்போது மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், பாடசாலை மட்ட அனர்த்த முன்னாயத்தத் திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் வழிநடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
பாடசாலைகளில் அனர்த்த அபாயங்களைக் குறைத்து, அவசர நிலைமைகளைத் திறம்பட எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது


