காந்தியச் சிந்தனைகள் இலங்கையின் இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண உதவும்

நூருல் ஹுதா உமர்

இலங்கையின் போருக்குப் பின்னரான இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகண்டு, நிலையான சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு மகாத்மா காந்தியின் சிந்தனைகள் வழிகாட்டியாக அமைய முடியும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒக்டோபர் 08, 09ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது உலகளாவிய காந்திய இலக்கிய மாநாட்டில் சர்வதேச முக்கிய உரையாளராகப் பங்கேற்ற அவர், போருக்குப் பின்னரான இலங்கையில் அரசுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதில் காந்தியச் சிந்தனைகளின் பயன்பாடு தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

மகாத்மா காந்தி மிஷன் மற்றும் மகாராஷ்டிரா காந்தி ஸ்மாரக் நிதி ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

2009ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவடைந்தபோதிலும், அதிகாரப் பகிர்வு, மொழி உரிமைகள், காணி உரிமைகள், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இன, மதச் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாகப் பேராசிரியர் தனது ஆய்வில் சுட்டிக்காட்டினார்.

காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம், சுயராஜ்யம் மற்றும் சர்வோதயம் ஆகிய நான்கு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை வலுப்படுத்துதல், மக்களின் பங்கேற்புடன் ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்துதல், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியது.

அத்துடன், இன, மத வெறுப்புகளைத் தடுத்தல், அமைதியான மக்கள் போராட்டங்களை ஜனநாயக உரிமையாக மதித்தல், சமூகங்களுக்கிடையிலான உரையாடல்களை ஊக்குவித்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியன நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமானவை எனவும் ஆய்வு பரிந்துரைத்தது.

அரசாங்கம் மட்டுமன்றி பல்கலைக்கழகங்கள், சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் இணைந்து பங்களிக்க வேண்டும் எனப் பேராசிரியர் வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் தனது ஆய்வைச் சமர்ப்பித்ததுடன், சர்வதேசப் பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார்.