( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மூன்று புதிய நூல்களின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் (10.10.2026) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜி மஹராஜ் தலைமையில் இவ் விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதிய “தியாகத்தின் திருவுருவம் சுவாமி ஜீவனானந்தர்” எனும் நூலும், கலாநிதி நிலாந்தினி செந்தூரன் எழுதிய “கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சியில் ராமகிருஷ்ண மிஷன்” எனும் நூலும், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் எழுதிய “தேடலின் விடியலினி” எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்படவுள்ளன.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி. சுந்தரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மோ. அகிலன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஞானரெத்தினம், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் பக்தர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.


