மட்டக்களப்பில் 445 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் 5,000 மக்களுக்கான வீடுகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 445 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

“தமண்கெம தெனக்” மானிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கத்தில் இன்று (05) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்.

இத்திட்டத்தின் ஊடாக சொந்த வீடின்றி வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கி. சுபாஸ்கரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.