எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
“திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம், மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘சிறுவர் கலை ஆற்றுகை அரங்கம்’ நிகழ்வு நேற்று (01.10.2026) பாடசாலை அதிபர் இ. புவேந்திரகுமார் தலைமையில் சிவகலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதிகளாக பாடசாலை மாணவ செல்வங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர், பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் (நிருவாகம்) யு. எல். எம். சாஜித் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்ததுடன், இந்த கலை ஆற்றுகை நிகழ்வில் பாடசாலை மாணவர்களது நாடகம், நடனம், பாடல் மற்றும் கவிதை போன்ற பல நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வின் போது தேற்றாத்தீவு கிராமத்தில் நூறு வயதினை பூர்த்தி செய்த சிவகலை வித்தியாலய ஸ்தாபகர் கார்த்திகேசு இராசையாவிற்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
“திவியட்ட சவியக்” வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 03 பயனாளிகளுக்கு
தெரிவு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகெளரி தரணிதரன், கணக்காளர் வ. நாகேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ. பிரபாகரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாலமுருகன் ஆலய தலைவர் பா. கமலநாதன், பிரதேச செயலக பதவிநிலை , உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு சிறுவர் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் இம்மாதம் பூராகவும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.o


