வடக்கு மாகாணத்தில் மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்குள் பழமையானவையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 வருடங்கள் பழமையான பேருந்துகள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதமும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்களிடம் முழுக் கட்டணம் அறவிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதிக்குள் அனுமதிகளை புதுப்பிக்கத் தவறும் பேருந்துகள் மீது ஒக்டோபர் 24ஆம் திகதிக்குப் பின்னர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை கைப்பற்றப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


