நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 15 வயதுக்குட்பட்ட (U15) டிவிஷன்-3 இரண்டாம் சுற்றுப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கல்முனை ஸாஹிறா கல்லூரி அபார வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கல்முனை ஸாஹிறா கல்லூரி மற்றும் உகண தேசிய கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிறா கல்லூரி அணி 81 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய உகண தேசிய கல்லூரி அணி, கல்முனை ஸாஹிறா கல்லூரி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 27 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் கல்முனை ஸாஹிறா கல்லூரி அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிறா கல்லூரி அணி 98 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
வெற்றிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய உகண தேசிய கல்லூரி அணி, மீண்டும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 22 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் கல்முனை ஸாஹிறா கல்லூரி அணி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, U15 டிவிஷன்-3 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அணியின் இந்த வெற்றிக்கு பொறுப்பாசிரியரும் பயிற்றுவிப்பாளருமான எம்.எம். ரஜீப், பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர், பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் அர்ப்பணிப்பு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.


