எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் அத்தம வேலைத்திட்டம் இடம்பெற்ற அதேவேளை புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய வளாகத்தில் பிரதான “அத்தம” தேசிய தூய்மைத் தின வேலைத்திட்டம் நேற்று (19) முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், நாவலடி இராணுவ முகாம் கெப்டன் சமீர ராஜபக்ஷ, வித்தியாலய அதிபர் எஸ்.ஐ. முஹாஜிரீன், வாகரை வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். தாஹிர் மற்றும் ஜே.எம். முனாஸ், பிரஜா சக்தி தலைவர் ஐ.எல். சமட், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அஸீஸா, பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எச். முகம்மட் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, “அத்தம” தேசிய தூய்மைத் தின வேலைத்திட்டத்தின் கீழ் வித்தியாலய வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அனைவரினதும் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இச்சுத்தப்படுத்தும் பணித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.
மாணவர்களுக்கு சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான கல்விச் சூழலை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுதல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி இடம்பெற்ற இந்நிகழ்வு, சமூகத்தின் ஒன்றுபட்ட செயற்பாட்டிற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.


