சூரிச்: பெரும் மக்கள் நெரிசலை ஏற்படுத்திய பழைய Züri Fäscht விழாவுக்குப் பதிலாக, முற்றிலும் புதிய வடிவிலான நகர விழாவை நடத்த சூரிச் நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2023-ல் கடைசியாக நடைபெற்ற Züri Fäscht விழாவில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதால், நகர மையம் மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எனவே, “சூரிச்சுக்கு ஒரு நகர விழா தேவை; ஆனால் அதற்கு புதிய வடிவம் அவசியம்” என நகரத் தலைவர் Raphael Golta தெரிவித்துள்ளார்.
புதிய விழா Zürich ஏரிக்கரை மற்றும் நகர மையத்தில் மட்டும் குவிக்கப்படாமல், Limmat மற்றும் Sihl ஆறுகளை ஒட்டி Höngg முதல் Leimbach வரை சுமார் 10 கிலோமீட்டர் நீளத்தில் பரவலாக நடத்தப்படவுள்ளது. முத்துமாலை போன்று தொடர்ச்சியாக அமைக்கப்படும் பல விழா மையங்கள் மூலம் சூரிச்சின் 15 Quartiere விழாவுடன் இணைக்கப்படவுள்ளன. இசை, குடும்ப பொழுதுபோக்கு மற்றும் Chilbi உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளன.
முதல் மூன்று நாள் விழா 2029 கோடைக்காலத்தில், கோடை விடுமுறைக்கு முந்தைய வார இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் Züri Fäscht போலவே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது திட்டமாகும். விழாவின் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
புதிய விழாவின் மொத்த செலவு CHF 8.5 முதல் 10.5 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சூரிச் நகரத்தின் பங்களிப்பு சுமார் CHF 5.1 முதல் 6.3 மில்லியன் வரை இருக்கலாம். Verein Zürcher Volksfeste 2027 நடுப்பகுதிக்குள் விரிவான திட்டத்தைத் தயாரிக்கவுள்ளது; 2028 தொடக்கத்தில் நகர நாடாளுமன்றத்தின் நிதி ஒப்புதலைப் பெறுவது இலக்காக உள்ளது.
அதேவேளை, பழைய Züri Fäscht-ன் முக்கிய அம்சங்களாக இருந்த வாணவேடிக்கை (Feuerwerk) மற்றும் Patrouille Suisse விமானக் காட்சிகள் புதிய விழாவில் இடம்பெறாது என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் மூலம்: Stadt Zürich


