மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் மனிதக் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்வு மற்றும் மனிதக்கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ESCO நிறுவன மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், மனிதக் கடத்தலைத் தடுக்கும் சமூக அடிப்படையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இயலுமை மேம்படுத்தும் முகமாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள், பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அறிவூட்டல், மனிதக் கடத்தல் தொடர்பான அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய பயிற்சிகள் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சமூக மட்டத்தில் மனிதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் பல்துறை பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக ஆதரவு வலையமைப்புகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

இத்திட்டம் Eastern Self-Reliant Community Awakening Organisation (ESCO) அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், Canada Fund for Local Initiatives (CFLI) நிதி ஆதரவினால் செயல்படுத்தப்படுகிறது.

இந் நிகழ்வின் வளவாளராக ESCO நிறுவன திட்ட ஆலோசகர் வே.காண்டிபன் அனுபவ ரீதியான நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளுக்கு தெளிவூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய வேலைத்திட்டங்கள் ஊடாக பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதோடு, மனிதக் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் இருந்து சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும்.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், ESCO நிறுவன பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரமணபிரசாத், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ESCO நிறுவனமானது மாவடத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் நிண்ட காலமாக பாதுகாப்பான புலம்பெயர்வை மேம்படுத்துவதற்கான தகவல் நிலையத்தின் மூலம் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.