இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க ஆற்றிய உரை — ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வு, 8 செப்டம்பர் 2026
நன்றி, தலைவர் அவர்களே!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூல அறிக்கையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தில் நிலையான முன்னேற்றம் என்பது தேசிய உரிமையுடனும், தேசிய தலைமையுடனும், நாட்டின் உள்நாட்டு யதார்த்தங்களுக்கு ஏற்பவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைப் பேணியவாறு, இலங்கை இந்தப் பேரவையுடனும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளது.
தலைவர் அவர்களே!
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டு இந்த மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
டிட்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பாரிய சவால்களுக்கு மத்தியிலும், நீதியானதும் சமத்துவமானதும் வளமானதுமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
மீண்டும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நிலையை அடைந்துள்ள இலங்கை, 2025ஆம் ஆண்டில் 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவைப் பலப்படுத்துதல் மற்றும் 2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தலைவர் அவர்களே!
வெளிப்புறச் சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறையின் அதிகாரக் காலத்தை நீடிக்கும் ஏற்பாடுகள் உள்ளிட்ட 60/1 தீர்மானத்தை இலங்கை ஆதரிக்கவில்லை.
இவ்வாறான வெளிப்புறப் பொறிமுறைகள் பிளவுகளை ஏற்படுத்துவதுடன், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உண்மையான தேசிய செயல்முறைகளைப் பலவீனப்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளன.
விசாரணைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் நினைவுகூரல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட சாதகமான மாற்றங்களை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அங்கீகரித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்கிறோம்.
கடந்த ஓராண்டில் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான சீர்திருத்தத் திட்டத்தை அரசாங்கம் உறுதியுடன் முன்னெடுத்துள்ளது.
அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்:
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, அடிப்படைச் சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் அதிகாரத் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் புதிய சட்டத்தால் அது மாற்றீடு செய்யப்படவுள்ளது.
அந்தச் சட்ட வரைவு தற்போது வர்த்தமானியில் வெளியிடப்படும் நடவடிக்கையில் உள்ளது. எதிர்வரும் மாதத்தில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான பங்குதாரர் ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளன. திருத்தங்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற சுயாதீன நல்லிணக்கப் பொறிமுறைகள், அதிகரிக்கப்பட்ட வளங்களுடன் தங்களுடைய பணிகளைத் தொடர்கின்றன.
ஏனைய நல்லிணக்கப் பொறிமுறைகளின் பணிகளுடன் முரண்பாடுகள் அல்லது தேவையற்ற ஒத்திசைவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான தற்போதைய வரைவு கட்டமைப்பு மீளாய்வு செய்யப்படுகிறது.
சுயாதீன வழக்குத் தொடருநர் அலுவலகமொன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையிலான குழு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
காணிகளை விடுவித்தல், அவற்றின் பெறுமதியை மதிப்பிடுதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவையால் அமைச்சுகளுக்கிடையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மோதலின்போது செல்லுபடியாகும் பயண ஆவணங்களின்றி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள், தன்னார்வத்துடனும் பாதுகாப்பாகவும் நாடு திரும்புவதை எளிதாக்கும் விசேட குடிவரவு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முதன்முறையாக, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளை அரசாங்கம் விரைவாகவும் விரிவாகவும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமூக அந்தஸ்து அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், சட்டவிரோதமானது என்று குற்றஞ்சாட்டப்படும் எந்தவொரு செயலையும் சுயாதீனமான தேசிய செயல்முறையின் ஊடாக விசாரித்து வழக்குத் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையில் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையும் அங்கீகரித்துள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரப் பிரிப்பு மற்றும் நீதியை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அவர்களுடைய ஓய்வுபெறும் வயதையும் அதிகரிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டச் சீர்திருத்தங்கள்:
- நீதித்துறையின் திறனையும் செயற்றிறனையும் வலுப்படுத்துதல்;
- தேங்கியுள்ள வழக்குகளையும் தாமதங்களையும் குறைத்தல்;
- நீதித்துறை நிபுணத்துவத்தையும் நிறுவன அறிவையும் தக்கவைத்தல்;
- நீதியை அணுகுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்;
- பிராந்திய மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிச் செயற்பாடுகளை எளிதாக்குதல்
ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
எமது சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் சவால்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்தவும், சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைக் குழுவொன்று விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.
தலைவர் அவர்களே!
இலங்கை நீண்டதும் சவால்கள் நிறைந்ததுமான பாதையைக் கடந்து வந்துள்ளது.
மோதலின் முடிவு சவால்களின் முடிவாக அமையவில்லை. மாறாக, அது குணமடைதல், மீள்கட்டமைத்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்டகாலச் செயல்முறையின் ஆரம்பமாக அமைந்தது.
அந்தச் செயல்முறைக்கு இதுவரை அடையப்பட்ட முன்னேற்றத்தை அங்கீகரித்தல், புரிந்துணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவை அவசியமாகும்.
தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது.
இறுதியாக, இந்தப் பேரவையை வழிநடத்தும் கோட்பாடுகளுக்கு அமைவாக, இலங்கையின் நிலைமை சமநிலையானதும் பக்கச்சார்பற்றதும் ஆக்கபூர்வமானதுமான முறையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று நாம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், நீதியானதும் வளமானதும் நல்லிணக்கம் நிறைந்ததுமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.


